ரயிலில் இளம்பெண் குத்தாட்டம்... இணையத்தை தெறிக்க விட்ட ’ட்யூப் கேர்ள்’ சப்ரினா!


சப்ரினா

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களைவிட சமூக ஊடக செலிபிரிட்டிகள் மீது அதிக வெளிச்சம் பாயும் காலம் இது. லண்டனில் அப்படியொரு இளம்பெண் வெகுவிரைவில் சமூக ஊடகங்களை ஆளத் தொடங்கி இருக்கிறார்.

சப்ரினா பசூன் என்ற இளம்பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. ’ட்யூப் கேர்ள்’ என்ற நாமகரணத்துடன் இவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வீடியோ பகிர்வு சமூக ஊடகங்களில் வெகுபிரபலமாக விளங்குகிறார். தனக்கான தடைகளையே தனித்தன்மையாக மாற்றியதில் சப்ரினா சாதனையும் படைத்திருக்கிறார்.

மலேசியாவில் பிறந்த சப்ரினா சட்டம் படிப்பதற்காக லண்டன் வந்தார். சதா துடிப்புடன் பட்டாம்பூச்சியாக வளையவரும் சப்ரினாவுக்கும், இதர இளசுகள் போலவே சமூக ஊடகங்களில் ஜொலிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அது எப்படி சாத்தியம் என்பது பிடிபடாது தவித்து வந்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற பாதாள ரயிலில் கல்லூரிக்கு சென்று திரும்புவதை வாடிக்கையாக கொண்ட சப்ரினா, அந்த நிலத்தடி ரயில் தடத்தையே தனக்கான தளமாக மாற்ற முனைந்தார்.

சப்ரினா

துள்ளாட்டம் மிக்க தனது நடனம் ஒன்றை, உடன் பயணிக்கும் நண்பனிடம் அலைபேசியில் பதிவு செய்யுமாறு கேட்டார். ஓடும் ரயிலில் சப்ரினாவின் வேகமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு துடிப்பாய் ஒளிப்பதிவு செய்ய இயலாது அந்த நண்பன் பின்வாங்கினான். வேறுவழியில்லாது தனது நடன அசைவுகளை தானே படமாக்கத் துணிந்தார். அதுதான் சப்ரினாவின் தனித்தன்மையாகவும் பின்னர் மாறிப்போனது.

புகழ்பெற்ற இசைத்துணுக்குகளுக்கு வாயசைத்தபடி இடுப்பை வெட்டியும், கேசம் சிலிர்த்தும், மின்னல் முகபாவங்கள் கூட்டியும் துடிப்பாக அவர் போடும் ஆட்டத்தில் அத்தனை எனர்ஜி இருக்கும். அதிலும், தனது அசைவுகள் தானே படம் பிடிப்பதில் தென்பட்ட நேர்த்தி, அதில் வெளிப்பட்ட தனித்தன்மை எல்லாம் சேர்ந்து சப்ரினாவை சீக்கிரமே சமூக ஊடக பிரபலமாக்கியது. ட்யூப் கேர்ள் என்ற தலைப்பில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சப்ரினா பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

சமூக ஊடக பிரபலங்களுக்கு சாத்தியமான வர்த்தக வாய்ப்புகள் குவியவே, இளம் வயது சப்ரினாவை மாடல் உலகும் வாரிக்கொண்டது. இதற்கு அப்பால் ட்ரெண்ட் செட்டராக சப்ரினா உருவெடுத்ததில், பேருந்து, ரயில், மெட்ரோ என சகல போக்குவரத்து உபாயங்களிலும், சுற்றியிருப்பவரை பொருட்படுத்தாது நடனமாடி அதனை வீடியோவாக பகிரும் ட்ரெண்டின் கர்த்தாவாக சப்ரினா மாறியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x