எக்ஸ் தளத்தில் கட்டண முறை இருந்து வரும் நிலையில், அதன் பீரிமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். முதலில் அதில் இருந்த லோகோவை மாற்றி வந்த எலான் மஸ்க், அடுத்து ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என மாற்றி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து ட்விட்டர் பக்கமானது எக்ஸ் வலைதளம் என அழைக்கபட்டு வருகிறது. இதேபோல் பிரபலங்கள், ப்ளு டிக் வாங்குபவர்கள் என வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையையும் கொண்டு வந்தார் எலான் மஸ்க். இந்த அறிவிப்பால் பல்வேறு வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
எனினும் பிரபலங்களும், செல்வந்தர்களும் எலான் மஸ்க் சொன்ன பணத்தை கட்டி, ப்ளு டிக் போன்ற அம்சங்களை பெற்று வருகின்றனர். ஆனால், சாதாரண பயனாளர்களால் முன்பு போல் எக்ஸ் தளத்தை எளிதாக கையாள முடியவில்லை. இது பெரிதும் பின்னடைவாக கருதப்பட்டாலும், இதை எலான் மஸ்க் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ’எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோயர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோயர்களாகக் கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் எக்ஸ் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.