அமெரிக்காவில் பிரதமர் மோடியின் முன்பாக பறை வாத்தியம் இசைத்துக் காட்டிய தமிழக கலைஞர்கள்


பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் கலந்துகொண்ட பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நீங்கள் இந்தியாவை அமெரிக்காவுடனும், அமெரிக்காவை இந்தியாவுடனும் இணைத்துள்ளீர்கள். உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு போட்டி இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால்வந்திருக்கலாம். ஆனால் எந்தக்கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை. பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையுடன் வாழ்வது என்பது நம் நரம்புகளில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். சுமார் 10-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றன. அப்போது பிரதமர் நரேந்திர மோடி முன்பாக பறை வாத்தியத்தை தமிழக கலைஞர்கள் இசைத்துக் காட்டி மகிழ்வித்தனர். அந்த இசை நிகழ்ச்சியை பிரதமர் வெகுவாக ரசித்தார்.

இதைத் தொடர்ந்து ராப்பாடல்களைப் பாடும் இசைக்கலைஞரான சூரஜ் சேருகட் என்று அழைக்கப்படும் ஹனுமன்கைன்ட் தனது பாடல்களால் மகிழ்வித்தார். அவருக்கு ‘ஜெய் ஹனுமான்' என்று கூறி பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்தார். பின்னர் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினார். இந்த இசைக் கலைஞர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகர் ஆதித்யா காத்வ், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். சுமார் 13,500 இந்திய வம்சாவளியினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். தெலுங்கு திரைப்படங்களான புஷ்பா, வால்டர் வீரய்யா படங்களில் இருந்து பாடல்களை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் அற்புதக் கலையான மல்லர் கம்பம் கலையை கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டினர்

x