பெய்ரூட்: தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால், குழந்தைகள், பெண்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை முதல் தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் எதிரிகள் நடத்திய தாக்குதல்களில் 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடக்கம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிக் குழு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதன் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சர்த்த நிலையில், இன்று லெபனானில் உள்ள பல பகுதிகளை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.
லெபனான் அதிகாரிகளின் தகவல்களின்படி, 80,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான இஸ்ரேலிய தொலைபேசி அழைப்புகள் மக்களை நகரங்களிலிருந்து வெளியேற்றும்படி கேட்டுக்கொண்டன என தெரிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஒகெரொவின் தலைவர், இமாட் ரெய்டீஹ் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இத்தகைய தொலைபேசி அழைப்புகள் "குழப்பத்தை ஏற்படுத்தும் உளவியல் போர்" என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட்ட புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மோதல் மேலும் பூதாகரமானது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போருக்குப் பிறகு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 37 உயிரிழந்ததாக லெபனான் சுகாதார துறை அமைச்சர் பிராஸ் அபைது தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் ஜெஸ்ரீ பள்ளத்தாக்கின் வடக்கு நகரங்கள் மீது10 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.