இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க: நாட்டு மக்களுக்கு உறுதி!


கொழும்பு: இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடைபெற்ற விழாவில், அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெய்சூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைவரான அநுர குமார திசாநாயக்க பெற்றார். ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். இருப்பினும் முதல் விருப்ப வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. அதனால் இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ணும் பணி நடந்தது. இதில் அநுரா குமார திசாநாயக்க மொத்தம் 57,40,179 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாச 45,30,902 வாக்குகள் பெற்றார்.

இதனையடுத்து கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் 9வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெய்சூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு அநுரா குமார திசாநாயக்க விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தேர்தலில் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் நான் பணியாற்றுவேன். எனக்கு முன் உள்ள சவால் மற்றும் சிக்கல் என்ன என்பதை அறிந்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன்” என அவர் தெரிவித்தார்.

அநுரா குமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதோடு ‘இரு நாடுகளின் நலனுக்காக இணைந்து பணியாற்றலாம்’ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவும் திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனுரா குமார திசநாயக பதவியேற்பதற்கு சற்று முன்னர், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையில் பிரதமராக இருந்து வந்தார்.

x