ஈரான் நிலக்கரி சுரங்க விபத்து: 51 பேர் உயிரிழப்பு


டெஹ்ரான்: ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு எரிவாயு வெடித்ததில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கொராசன் மாகாணத்தின் ஆளுநர் அலி அக்பர் ரஹிமி நேற்று கூறியதாவது: ஈரானின் கொராசன் மாகாணத்தில் மதன்ஜூ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தின் பி மற்றும் சி ஆகிய இரண்டு தொகுதிகளில் இருந்த மீத்தேன் எரிவாயு சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெடித்து சிதறியது. பி தொகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொகுதியில் பணியில் இருந்த 47 தொழிலாளர்களில் 30 பேர் உயிரிழந்துவிட்டனர். காயமடைந்த 17பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சி தொகுதியில் மீத்தேன் அடர்த்தி அதிகமாக உள்ளதால் மீட்பு பணிகள் 4 மணி நேரம்தாமதமாகின. இங்கு வெடிவிபத்து ஏற்பட்ட போது 69 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இதில், 21 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதியாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணிமுழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அலி அக்பர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

x