உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றிருப்பது இந்தியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி 2 ஆட்டங்களைக் கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள் அந்த போட்டியும் டிராவில் முடிவடைந்த நிலையில், இன்று நடந்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு எதிரான டை பிரேக்கரின் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இதில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சென் முன்னிலை பெற்றுள்ளார்.
ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அது போக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும். இதில் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.