உலகின் வளர்ச்சி இயந்திரமாகும் இந்தியா... பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி


பிரதமர் மோடி

உலகிற்கான வளர்ச்சி இயந்திரமாக வரும் ஆண்டுகளில் இந்தியா உருவாகும் என்று பிரிக்ஸ் 2023 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் மூன்று நாள் மாநாடு தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோகன்னஸ்பர்க் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் உலகத் தலைவர்களை சந்தித்த மோடி, முக்கிய உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசுகையில், " உலகப் பொருளாதார சூழ்நிலையில் கொதிப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உருவாகும். கொரோனா பெருந்தொற்று காலத்தை பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பாக இந்தியா மாற்றியதே இதற்குக் காரணம்.

நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம், இந்தியாவில் வணிகம் மேம்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை கொண்டுவந்ததன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளோம். எதிர்காலத்தில் புதிய இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்" என்றார்.

முன்னதாக, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு நடத்தினார். தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாளை(ஆக.24) கிரீஸ் நாட்டுக்குச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா.

தேசியக் கொடிக்கு மோடி கவுரவம்

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேடையில் அவர்கள் நிற்கும் இடத்தை தெரியப்படுத்துவதற்காக அந்தந்த நாடுகளின் கொடிகள் தரையில் வைக்கப்பட்டிருந்தன.

தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசாவுடன் மோடி மேடையேறினார். தரையில் நமது தேசியக் கொடி வைக்கப்பட்டிருந்ததை பார்த்துவிட்டு காலில் படாமல் கவனமாக எடுத்து தனது பையில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அதிபர் ராமபோசா ஏற்கெனவே தான் மிதித்துக் கொண்டிருந்த தங்கள் நாட்டுக் கொடியை கீழே குனித்து எடுத்து அதிகாரியிடம் கொடுத்தார்.

மோடியிடமும் நமது தேசியக் கொடியை அந்த அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னார். ஆனால், அதை மறுத்த மோடி நம் கொடியை தனது பையிலேயே பத்திரப்படுத்திக் கொண்டார். நம் தேசியக் கொடிக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

x