கிரீஸின் லெஸ்போஸ் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் இருந்த 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கொமோராசில் பதிவுசெய்யப்பட்ட அந்த கப்பல், எகிப்திலிருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்பை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சிரியன்கள் ஆகிய 14 மாலுமிகள் பணியில் இருந்தனர். கப்பல் மூழ்கிய தகவல் தெரியவந்ததும் உடனடியாக நடைபெற்ற மீட்புப் பணியில் எகிப்து மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
நேற்று காலை 7 மணி அளவில் லெஸ்போஸின் தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, இந்த சரக்கு கப்பலில் திடீரென இயந்திர பழுது ஏற்பட்டதாகவும், கப்பலில் இருந்து அபாய சிக்னல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'மாயமான கப்பல் ஊழியர்களைத் தேடும் பணியில் 8 கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், கிரீஸ் போர்க்கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புயல் காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், சரக்கு கப்பல் மூழ்கிய பகுதியை மீட்பு படையினர் சென்றடைய கடும் சவாலை சந்திக்க நேர்ந்தது. தற்போதைய நிலையில் தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் வடமேற்காக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசுகிறது என்றார்.
கிரீஸ் கடற்பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் வீசிய புயல் காற்று காரணமாக துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கிரீஸின் வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் ஒன்று சேதமடைந்தது. அடுத்தடுத்து புயல், மழை வெள்ளத்தால் கிரீஸ் நாடு கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.