வியட்நாமை சூறையாடிய யாகி புயல்: கடும் வெள்ளத்தில் சிக்கி 197 பேர் பலி; 128 பேர் மாயம்


ஹனோய்: யாகி புயலால் வியட்நாமில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 125 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளன.

யாகி புயல் வடக்கு வியட்நாமில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியதை தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 128 பேர் காணாமல் போயுள்ளனர், 800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,50,000 ஹெக்டேர் பயிர்களும் நாசமாகின என்றும் விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள பேரிடர் அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தனர்.

30 ஆண்டுகளில் வடக்கு வியட்நாமை தாக்கிய மிக சக்திவாய்ந்த சூறாவளி யாகி என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். யாகி புயலால் சனிக்கிழமையன்று மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பாலங்கள், கட்டிடங்களின் கூரைகள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.

இன்னும் பல பகுதிகள் நீருக்கடியில் இருப்பதால், நாட்டின் வடக்குப் பகுதி கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலிசெய்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பெரும்பாலான பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹனோய் புறநகர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாகி புயலால் சுமார் 1.5 மில்லியன் கோழிகள் மற்றும் வாத்துகள் மற்றும் 2,500 பன்றிகள், எருமைகள் மற்றும் பசுக்கள் உயிரிழந்துள்ளதாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

x