சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... உலக சுகாதார அமைப்பு அலர்ட்!


சீனாவில் நிமோனியா நோயால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், குழந்தைகளின் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பெய்ஜிங் உட்பட சீனா முழுவதும் உள்ள நகரங்களில் நிமோனியா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் "நோயுற்ற குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன" என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரபூர்வமாக சீனாவிடம் இருந்து குழந்தைகளில் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் குழந்தைகள் இடையே நிமோனியா காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எதனால் இந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளையும், சோதனைகளை முன்னெடுக்க உள்ளோம். மேலும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

’’சுவாச நோய் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வீட்டிலேயே இருப்பது. பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல். பொருத்தமான முகக்கவசம் அணிதல். நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும். அடிக்கடி கைகளை கழுவுதல்’’ போன்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

x