‘வங்கதேசம் ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக மாறாது’ - இந்தியாவுக்கு முகம்மது யூனுஸ் பதில்


முகம்மது யூனுஸ் | கோப்புப்படம்

டாக்கா: ஷேக் ஹசீனாவின் தலைமை இல்லாமல் வங்கதேசம் மற்றுமொரு ஆப்கானிஸ்தானாக மாறிவிடும் என்ற இந்தியாவின் கருத்தை அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இந்தக் கதைகளை விட்டுவிட்டு இருதரப்பு உறவுகளை முன்னேற்றத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசின் ஆலோசகர் முகம்மது யூனுஸ் பேட்டியளித்தார். அப்போது, வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யூனுஸ், "இந்தத் தாக்குதல்கள் அடிப்படையில் அரசியல் ரீதியிலானது மாறாக வகுப்புவாதம் கொண்டது இல்லை. இந்தத் தாக்குதல்களை இந்தியா மிகப்பெரிய அளவில் பேசி வருகிறது. எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் அனைத்தையும் செய்கிறோம் என்றே நாங்கள் சொல்கிறோம்.

இந்தியாவுடன் நல்லுறவாக இருப்பதை வங்கதேசம் விரும்புகிறது. ஆனால், ஷேக் ஹசீனாவின் தலைமைதான் வங்கதேசத்தில் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்துபடுகிறது என்ற கதையை இந்தியா கைவிட வேண்டும். இந்தக் கதையிலிருந்து வெளியே வருவதே முன்னோக்கி செல்வதற்கான வழி.

ஷேக் ஹசீனாவைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாமிய மதவாதிகள், வங்கதேச தேசிய கட்சி (BNP) மதவாத கட்சி, அவர்கள் வங்கதேசத்தை மற்றுமொரு ஆப்கானிஸ்தானாக மாற்றுவார்கள், ஷேக் ஹசீனா தலைமையில் மட்டுமே வங்கதேசம் பாதுகாப்பானதாக இருக்கும் போன்ற கதைகளால் இந்தியா ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதையிலிருந்து இந்தியா வெளியே வர வேண்டும். வங்கதேசம் மற்ற தேசங்களைப் போல இன்னுமொரு அண்டை நாடு.

இரு நாடுகளும் உறவை மேம்படுத்த ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது குறைந்த நிலையில் உள்ளது. ஷேக் ஹசீனாவை, வங்கதேசத்துக்கு நாடு கடத்தக் கோரும் வரை, அவரை தங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கும் இடையே அசவுகரியம் ஏற்படாமல் இருக்க அவர் அமைதியாக இருக்க வேண்டும்" இவ்வாறு யூனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து இந்தியா கவலைத் தெரிவித்துருக்கும் பின்னணியில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் முகம்மது யூனுஸின் இந்தக் கருத்து வந்துள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி டாக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். அந்தக் கலவரத்தின் போது வங்கதேசத்தில் இந்துக்கள், அவர்களின் வணிகநிறுவனங்கள், சொத்துக்கள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.

x