பாகிஸ்தானில் பேருந்துகளில் இருந்து பயணிகளை இறக்கி அடையாளம் பார்த்து 23 பேர் சுட்டுக்கொலை


பலுசிஸ்தான் மாகாணத்தின் குசாக்கெயில் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் வாகனங்களை மடக்கி 23 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பின்னர் தீவிரவாதிகள் தீ வைத்ததில் கருகிய வாகனங்கள். படம்: பிடிஐ

குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற பயணிகளில் அடையாளம் பார்த்த பின்னர் 23 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பாகிஸ்தானின் தென் மேற்குப்பகுதியில் உள்ள பலுசிஸ்தான்பெரிய நிலப்பரப்பை கொண்டது. இப்பகுதி மக்கள் தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடிவருகின்றனர்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களில்ஒரு பிரிவினர் இந்தியாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துவருகின்றனர். அத்துடன் போராட்டங்கள், ஊர்வலங்களின்போது இந்திய தேசிய கொடிகளை ஏந்திபலுசிஸ்தான் மக்கள் முழக்க மிடுகின்றனர்.

இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் குசாக்கெயில் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த பேருந்துகள், டிரக்குகள், மற்ற வாகனங்களை தீவிரவாதிகள் வழி மடக்கினர். வாகனங்களில் இருந்து பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.

10 வாகனங்கள் தீக்கிரை: அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் பார்த்தனர். பின்னர் அவர்களில் 23 பேரை சுட்டுக் கொன்றனர். பின்னர் தப்பியோடும் முன்னர் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் அனைவரும் பலுசிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ளபஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஷின்நக்வி கூறும்போது, ‘‘காட்டுமிராண் டித்தனமான இந்தத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தசம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பலுசிஸ்தான் தனிநாடு கோரி வன்முறையில் ஈடுபட்டு வரும் பலுச் விடுதலைப் படை, ‘‘நெடுஞ்சாலைகளில் பலுசிஸ்தான் மக்கள் பயணம் செய்யாமல் இருங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கை வெளியான மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

மேலும், பலுசிஸ்தான் பகுதியில் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பலுசிஸ்தான் மாகாணம்நவ்ஷிக் நகரில் பேருந்தில் சென்றவர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் 11 தொழிலாளர்களைதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது

x