அமெரிக்காவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர், மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலி என்பவர் கொள்ளையர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இதே போல் ஜார்ஜியாவின் லித்தோனியா நகரில் இந்திய மாணவர் விவேக் ஷைனி என்பவரை போதை ஆசாமி ஒருவர் கொடூரமாக தாக்கினார். கடந்த ஜனவரி மாதம் துவங்கியதில் இருந்து மட்டும், அமெரிக்காவில் இதுவரை 4 இந்திய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தாக்குதல்கள் காரணமாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டில் பல்வேறு இந்து மத கோயில்கள் மற்றும் இந்தியர்களின் வழிபாட்டு தலங்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மர்ம நபரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாஷிங்டன் நகரில் டைனமோ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் டனேஜா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2ம் தேதி 15வது தெருவில் 1100வது பிளாக்கில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவருடன், டனேஜாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் டனேஜாவை கடுமையாக தாக்கி கீழே தள்ளியதில், டனேஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவத்திற்கு விரைந்து சென்று டனேஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 7ம் தேதி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், டனேஜாவை அந்த மர்ம நபர் கீழ் தாக்கி கீழே தள்ளிவிடும் வீடியோ காட்சிகளும் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.