காத்மாண்டு: நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றில் இந்திய பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச நம்பர் பிளேட் கொண்ட அந்த பேருந்தில் 40 இந்தியர்கள் இருந்தனர். அப்பேருந்து பொக்ராவிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “உத்தர பிரதேசம் எஃப்டி 7623 என்ற எண் கொண்ட பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனா பஹாரா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
நேபாள ஆயுதப்படை பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் மாதவ் பாடேல் தலைமையிலான 45 போலீஸார் குழு விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியப் பயணிகள் பொக்காராவில் உள்ள மஜேரி ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை பொக்காராவில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து புறப்பட்டது. அப்போது இந்த விபத்து நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருவதாக உத்தரப்பிரதேச நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், நேபாளத்தில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 7 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த சம்பவத்தில் பலரின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.