உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு!


கிவ்: தனது இரண்டு நாள் போலாந்து பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தலைநகர் கிவ்-க்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்கு தற்போது நிகழ்ந்து வரும் போருக்கு அமைதியாக தீர்வு காண்பது குறித்த தனது பார்வையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணத்துக்கு ஆறுவாரங்களுக்கு பின்பு இந்த உக்ரைன் பயணம் நிகழ்ந்துள்ளது. தனது இருநாட்டு பயணத்தின் இரண்டாவது பயணமாக, போலாந்து தலைநகரில் இருந்து ‘ரயில் ஃபோர்ஸ் ஒன்’ரயில் மூலமாக 10 மணிநேரம் பயணம் செய்து, கிவ் சென்றடைந்தார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உடன் சென்றனர்.

இந்த பயணத்தில், பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடி மற்றும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவார். இதில் தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது குறித்து கவனம் செயலுத்தப்படும். கடந்த 1991ம் ஆண்டு உக்ரைன் விடுதலை அடைந்த பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

முன்னதாக தனது பயணத்துக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டிருந்த அறிக்கையில், "உக்ரைன் பிரதமர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பெயரில் போலந்தில் இருந்து உக்ரைன் செல்கிறேன். இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை.

இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஜெலன்ஸ்கியுடனான முந்தைய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலான வாய்ப்புகள், மற்றும் உக்ரைன் மோதலுக்கான தீர்வுகளுக்கான பார்வைகளை பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன். ஒரு நண்பனாக மற்றும் கூட்டாளியாக இந்தப் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடைய, ரஷ்யா - உக்ரைன் போரினை தீர்ப்பதற்கு இந்தியா ஆக்கப்பூர்வமான மற்றும் முக்கியமான பங்கினை ஆற்றமுடியும் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

x