காசாவில் ஹமாஸ் வசம் பிணைக்கைதியாக சிக்கியிருந்த இஸ்ரேலியர்களில் 50 பேர், இஸ்ரேல் வான்படை தாக்குதலில் சிக்கி பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் போராளிகளின் ஆயுதக் குழு நடத்தி அதிர்ச்சித் தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் இருந்தபடி இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளாலும் இஸ்ரேலில் உயிர்ப்பலிகள் உயர்ந்தது. இவ்வாறாக 1400க்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த இஸ்ரேல், உடனடி பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. இது தவிர்த்து, ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்களை மீட்கும் நோக்கத்துடன் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
அப்படி காசா மீது இஸ்ரேலிய வான்படையினர் தொடுத்த தீவிர தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினரைவிட அப்பாவி பொதுமக்களே அதிகம் பலியானார்கள். குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் மீது வீசப்பட்ட குண்டுகளால், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கிலான சாமானியர்கள் பலியானார்கள். குடியிருப்பு பகுதிகளில் பதுங்கியபடி, பொதுமக்களை மனிதக் கேடயமாக ஹமாஸ் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
குடியிருப்புகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதற்கு, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பாவி மக்களை கொல்லும் நோக்கத்தோடு வீசப்படும் ஒவ்வொரு குண்டுக்கும், தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் தற்போது ஹாமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸாம் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் குண்டு வீச்சால், தங்கள் வசமிருந்த இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 50 பேர் பலியானதாக அல் கஸாம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்தத்துக்கு உட்பட்டு, ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகளில் சிலர் தவணை முறையில் விடுவிக்கப்படுவதன் மத்தியில், வெளியாகி இருக்கும் இந்த தகவல் இஸ்ரேலை மீண்டும் சீண்டியுள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் கொல்லப்பட்டார்களா அல்லது முன்னதாக அல் கஸாம் மிரட்டல் விடுத்தவாறு இஸ்ரேலிய பிணைக்கைதிகளை அதுவே கொன்றதா என்ற ஐயமும் இஸ்ரேலுக்கு எழுந்துள்ளது.