கலவரத்தின் போது மீன் வியாபாரி கொலை: வங்கதேச முன்னாள் பிரதமர் மீது புதிய கொலை வழக்குப்பதிவு 


வங்கதேச முன்னாள் முதல்வர் ஷேக் ஹசீனா | கோப்புப்படம்

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு மறுசீர்திருத்தம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது மீன் வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது புதிதாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட 62 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் காரணமாக பதவியை ராஜினாமா செய்து நாட்டிலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் இது புதியது. கடந்த ஜுலை 21ம் தேதி உள்ளூர் மீன் சந்தையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எம்டி மிலோன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி ஷகானாஸ் பேகம் அளித்த புகாரின் பெயரில் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஹசீனா, முன்னாள் சாலை மற்றும் பாலங்கள்துறை அமைச்சர் ஒபைதுல் ஒபைதுல் குவாடர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாமிம் ஒஸ்மான், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் உள்ளிட்ட 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கைகளின் தகவல் படி, ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆர்வலரகள் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் தடிகளுடன் ஆயுதம்தாங்கி போராடிய மாணவர்களின் போராட்டங்களை சீர்குலைப்பதற்காக டாக்கா - சிட்டாங்க் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தினர்.

அப்போது போராட்டாம் நடத்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷேக் ஹசீனா, கதார் மற்றும் அசாதுஸ்மான் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டனர்.

அப்போது உள்ளூர் மீன் சந்தையில் இருந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த மிலோன், மார்புகளில் குண்டு பாய்ந்து சாலையில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் அங்குள்ள ப்ரோ ஆக்டிவ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மிலோன் கொலை தொடர்பாக பதியப்பட்டுள்ள இந்த புதிய வழக்கின் மூலம், ஷேக் ஹசீனா மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக ஜூலை மாதத்தின் மத்தியில் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. அந்த கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.

இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அவரின் வெளியேற்றத்துக்கு பின்னர், வங்கதேசத்தில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு உருவாக்கப்பட்டது. அதற்கு நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

x