பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!


ஐஸ்லாந்தில் பெண்கள் வேலைநிறுத்தம்

ஐஸ்லாந்து நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம், பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் காத்ரின், இன்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்துள்ளார்.

உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஐஸ்லாந்து நாட்டில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பல்வேறு தொழில்களில் ஆண்களின் வருமானத்தை விட 20 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளில் பெண்கள் அதிக அளவில் பணியில் ஈடுபட்டிருந்தாலும், போதிய அளவிலான ஊதியம் இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

பாலின சமத்துவம் கோரி பெண்கள் வேலைநிறுத்தம்

இதனை கண்டிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் அனைத்து பணிகளில் இருந்தும் பெண்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் கேத்தரின் ஜக்கோப்ஸ்டாட்டிர், இன்று ஒரு நாள் தனது பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அவர் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

ஐஸ்லாந்து பிரதமர் கேத்தரின் ஜக்கோப்ஸ்டாட்டிர்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த போராட்டம் துவங்கிய போதும் தொடர்ந்து பாலின சமத்துவத்திற்காக போராட வேண்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முழுமையான பாலின சமத்துவம் ஏற்பட 300 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து நாட்டில் இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருப்பதால் அங்கு தொழில்கள் பெருமளவு முடங்கியுள்ளது. மருத்துவமனைகள், அவசர கால நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளன.

x