பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!


பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 2 திருநங்கைகள்

உலக அழகிப் போட்டிகளில் புதுமை நிகழ்வாக, எல் சால்வடாரில் நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான மேடையில், திருநங்கையர் இருவர் பங்கேற்று போட்டியிட உள்ளனர். அழகிப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று ஏற்கனவே இவர்கள் விருதுகளை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் - பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவரும் சாதனைகள் படைக்க ஆரம்பித்துள்ளனர். தடைகள் பலவற்றை கடந்து பொதுவெளியில் அவர்கள் பிரவேசிப்பதே பெரும் சாதனையாக உள்ள காலத்தில், மூன்றாம் பாலினத்தவரின் முன்னோடிகள் சிலர், உலகளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அழகிப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கி உள்ளனர்.

மத்திய அமெரிக்க தேசமான எல் சால்வடாரில் 72-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் மிஸ் நெதர்லாந்து அழகியான ரிக்கி கோலே, மிஸ் போர்ச்சுக்கல் அழகியான மரினா மச்சேட் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். திருநங்கையரான இவர்கள் இருவரும், 90 அழகிகள் மோதும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் தங்கள் தேசம் சார்பாக பங்கேற்கிறார்கள்.

மிஸ் போர்ச்சுக்கல் மரினா மச்சேட்

இருவரில் மரினா மச்சேட் அடிப்படையில் ஒரு விமானப் பணிப்பெண் ஆவார். உலகம் முழுமைக்குமான திருநங்கையர்களுக்கு முன்னோடியாக இருப்பதே பெரும் சாதனை என்று இவர் பெருமிதம் கொள்கிறார். விமான பணிப்பெண், மிஸ் போர்ச்சுக்கல் அழகிப் போட்டி ஆகியவற்றில் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே பங்கேற்கவும், வெற்றிபெறவும் முடிந்ததாக இவர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு திருநங்கை அழகியான ரிக்கி வலேரி கோலே, இந்த ஜூலை மாதம்தான் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை வென்றிருந்தார். ஆணாகப் பிறந்து தங்களை பெண்ணாக உணரத் தலைப்பட்ட இந்த பால் புதுமையர், உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ’உயிரியல் அடிப்படையில் ஆணாக பிறந்தவர்கள், பெண்களுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்பது விசித்திரமானது, மோசமான முன்னுதாரணம்’ என்றும் இந்த எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மிஸ் நெதர்லாந்து அழகி ரிக்கி கோலே

மெரினா மச்சேட் மற்றும் ரிக்கி வலேரி கோலே ஆகிய இருவருக்கும் முன்னதாக, ஸ்பெயினின் ஏஞ்சலா போன்ஸ் என்ற திருநங்கை ஏற்கனவே உலக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதல் திருநங்கை போட்டியாளராக இவர் வரலாறு படைத்தார். ஏஞ்சலாவை பின்பற்றி தற்போது எல் சால்வடார் பிரபஞ்ச அழகிப் போட்டியின் மேடையில், 2 திருநங்கையர் பங்கேற்கப் போகின்றனர்.

x