வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு!


டாக்கா: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில் கடந்த வாரம் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டார். இதனையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. அங்கு வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர இடைக்கால அரசு முயற்சி செய்து வருகிறது.

ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விசாரணைக்கு வர உள்ளது.

அமிர் ஹம்சா ஷாடில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தக் கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை அமைச்சர் அசதுஸ்மான் கான் கமல் உள்ளிட்ட 6 பேர் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

x