‘ஹமாஸ் அமைப்பை எதிர்க்க மாட்டோம்...’ மதில் மேல் பூனையான சீனா!


காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில், உலகின் முக்கிய வல்லரசு தேசமான சீனாவின் நிலைப்பாடு விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் இன்று 5வது நாளாக தொடர்கிறது. அக்.7 அன்று திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக, இஸ்ரேல் நிதானமாகவும், திடமாகவும் போர்த் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலின் பெயரில், காஸா வாழ் பாலஸ்தீனிய குடிமக்களையும் இஸ்ரேலிய ராணுவம் கொன்று குவித்து வருகிறது. மோதலில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே எவருக்கு ஆதரவு என்பதில் உலகம் ரெண்டுபட்டிருக்கிறது.

இஸ்ரேல் - சீனா

வழக்கம்போல அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் நிற்பதுடன், உதவிக்காக போர்க்கப்பலை அனுப்பி வைத்திருக்கிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. சௌதி தவிர்த்து மத்திய கிழக்கின் பெரும்பாலான இஸ்லாமிய தேசங்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிற்கின்றன. இரான், லெபனான் உள்ளிட்ட தேசங்கள், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளன.

நாடு சுதந்திரமடைந்தது முதலே பாலஸ்தீனியர்கள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த இந்தியா, தற்போது தீவிரமாக இஸ்ரேல் பக்கம் சாய்ந்துள்ளது. இதர இஸ்லாமிய நாடுகளின் அங்கமாக பாகிஸ்தான், பாலஸ்தீன ஆதரவை உறுதி செய்துள்ளது. இவற்றுக்கு மத்தியில், சீனாவின் நிலைப்பாடு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

’இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் எந்த நாட்டையும் எங்களால் கண்டிக்க முடியாது. குறிப்பாக ஹமாஸ் இயக்கத்தையும் நாங்கள் எதிர்க்க மாட்டோம். இந்த போரில் நீதியின் பக்கமே சீனா நிற்கும்’ என சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ’உலக வல்லரசாக ஆசைப்படும் சீனா, முக்கிய சர்வதே போர் விவகாரத்தில் பற்கள் இன்றி பேசியிருப்பது வேடிக்கையானது’ என மேற்கு ஊடகங்கள் சீனாவின் நிலைப்பாட்டினை சாடி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

x