திலகம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? - மும்பை கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


புதுடெல்லி: பொட்டு, திலகம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று உங்களால் கூற முடியுமா என்று மும்பை கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளத்துடன் தொடர்புடைய ஹிஜாப், நகாப், புர்கா, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து வரதடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக மும்பை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கல்லூரி 9 மாணவிகள் மும்பை உயர் நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மும்பை கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், கடந்த 2008-ம் ஆண்டு முதல் கல்லூரி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், "இத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் இதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் தற்போது திடீரென மதம் இருப்பதை உணர்ந்து விட்டீர்களா? பொட்டு, திலகம் வைத்துக் கொண்டு கல்லூரி வர வேண்டாம் என்று உங்களால் கூற முடியுமா?

ஒரு பெண் என்ன உடை அணிய விரும்புகிறார் என்பது அவரது சொந்த விருப்பம். பெயர் மூலம் ஒருவரின் மதம் வெளிப்பட்டு விடாதா? இதுபோன்ற உத்தரவை கல்லூரிகள் பிறப்பிக்க கூடாது" என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஹிஜாபுக்கு தடை விதிக்கும் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

x