தெற்கு மெக்சிகோவில் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 16 புலம் பெயர்ந்தோர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு மெக்சிகோவில் ஓஸாக்காவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அண்டை மாநில எல்லையான டெபெல்மேம் நகரில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென பள்ளத்திற்குள் உருண்டது.
இதில் 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் வெனிசுலா மற்றும் ஹைட்டியில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அமெரிக்க எல்லையை நோக்கி பயணிக்கும் புலம் பெயர்ந்தோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் குவாத்தமாலாவின் எல்லைக்கு அருகே அண்டை மாநிலமான சியாபாஸில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மோதியதில் கியூபாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இதில் இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். 27 புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற டிரக்கின் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் கூறினர்.