1200 வீடுகள் தீக்கிரை... தப்பிய உயிர்கள்... நிர்கதியாய் நிற்கும் 7000 ரோஹிங்கியா அகதிகள்!


வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து

வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானதால் 7,000க்கும் மேற்பட்ட அகதிகள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மியான்மரில் சிறுபான்மையினராக கருதப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அவர்கள் அகதிகளாக, வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்காக வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு தற்காலிக வீடுகளில் அவர்கள் குடியிருந்து வருகின்றனர். பிளாஸ்டிக் பேப்பர்கள், தார்பாய்கள், தகரங்கள், மூங்கில்கள் உள்ளிட்டவற்றில் அமைக்கப்படும் இது போன்ற வீடுகள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொள்ளும்.

1200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானதால் 7 ஆயிரம் மக்கள் தவிப்பு

அந்த வகையில் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள குட்டுபலாங் முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, அங்கிருந்த 1,200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை முழுமையாக எரித்து சாம்பலாக்கியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீடுகள் முழுவதுமாக தீக்கிரையானதால், 7,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தீ விபத்து நடைபெற்று உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருக்கும் முகாம்கள் தீக்கிரையாவது இது முதல் முறை அல்ல. கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானதோடு, 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

x