மியாசகி: ஜப்பானில் தெற்கு கடற்கரை பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘ஜப்பானின் தெற்கு தீவான கியூஷு பகுதியின் கிழக்கு கடற்கரையில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.9 அலகுகளாகப் பதிவானது. அதற்கடுத்து தென்கிழக்கில் மியாசகி அருகே 26 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும் பதிவானது’ என்று தெரிவித்துள்ளது.
மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த நிலநடுக்கம் ஹியுகா - நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடலில் நிலநடுக்கம் காரணமாக சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றன. இதனையடுத்து மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா, எஹிம் போன்ற மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் அரசு. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, பலி உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில், கியூஷு மற்றும் ஷிகோகு அணுமின் நிலையங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.