நிலநடுக்கத்தால் பாதித்த மக்களுக்கு துணை நிற்போம் - ஜப்பானுக்கு பிரதமர் மோடி கடிதம்!


ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியுள்ள அந்த கடிதத்தில், “கடந்த ஜனவரி 1ம் நாள் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அறிந்தபின் மிகுந்த வருத்தமடைகிறேன். ஜப்பானுடனான உறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜப்பானுக்கும் ஜப்பான் மக்களுக்கும் துணையாக நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது என்றும், இதுவரை 242 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சாலைகள் அனைத்தும் மோசமாக சேதமாகியிருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்கு பெனின்சுலா பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்திருப்பதால் அங்கு மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண், தற்போது இடிபாடுகளில் இருந்து கவனமாக மீட்கப்பட்டிருக்கிறார். மக்கள் தற்போது 34,000 பேர் வீடுகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர்கள் வெளியில் சுகாராதமற்ற முறையில் வசிப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களில் பலர் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x