வங்கதேச வன்முறை | ஷேக் ஹசீனா கட்சித் தலைவர்கள் 29 பேரின் உடல்கள் கண்டெடுப்பு


டாக்கா: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 29 தலைவர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான எதிர்ப்பில் உருவான வன்முறை தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமைடந்தார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்பு, சக்திராவில் நடந்த வன்முறையில்10 பேர் கொல்லப்பட்டனர். அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வணிகநிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக டாக்கா ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

குமில்லியாவில் நடந்த ஒரு கும்பல் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் கவுன்சிலர் முகம்மது ஷா ஆலமின் மூன்று மாடி வீட்டு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, எம்.பி., ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் வீட்டுக்கு கும்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை தீ வைத்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்த கண்டெடுக்கப்பட்டன.

அதேபோல், அவாமி லீக் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜூபோ லீக்கின் இரண்டு தலைவர்களின் உடல்களை உள்ளூர்வாசிகள் கண்டெடுத்துள்ளனர். அதில் ஜூபோ லீக் தலைவர் முஷிபிகுர் ரஹிம் உடல் ஷோனாகாசி உபாஸிலாவிலுள்ள பாலத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போக்ராவில் கும்பல் ஒன்று இரண்டு ஜூபோ லீக்-ன் தலைவர்களை வெட்டிக்கொன்றது.

திங்கள்கிழமை லாமோனிர்கத்தில் மாவட்ட அவாமி லீக் கட்சியின் இணை பொதுச் செயலாளர் சுமன் கானின் வீடு கும்பல் ஒன்றால் தீவைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வங்கதேச வன்முறை பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 கடந்துள்ளதால் அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இதனிடையே, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததில் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள. வங்கதேச நிலை குறித்து கவலை அடைவதாக இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமை உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இடைக்கால அரசாங்கம் அமைந்துள்ளது.

x