புதுடெல்லி: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசு திங்கள்கிழமை கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அவர் தங்குவதற்கு இந்தியா இடைக்கால அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்காலத்தில் ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்து புகலிடம் அளிக்கும் வரை இந்தியா அவருக்கு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பிரிட்டனில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவாதால், இந்தியாவில் அவர் தற்காலிகமாகவே தங்கியிருப்பார்.
ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு வலுத்ததால் திங்கள்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் இந்தியா வழியாக லண்டன் செல்ல இருக்கிறார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர், தனது தங்கை ரெகானாவுடன் இங்கிலாந்தில் தங்குவதற்காக அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. ரெகானா, வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இளைய மகளாவார். மேலும் ஷேக் ஹசீனாவின் தங்கையுமாவார். ரெகானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் தொழிலாளர் கட்சி பிரதிநிதியாக உள்ளார்.
இதனிடையே, வங்கதேசத்தில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேச அரசின் நிலைமை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருந்தது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, டாக்காவிலிருந்து தப்பியதை அடுத்து, அந்நாட்டு ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் நாட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்போம். நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது. என் பேச்சுக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். போராட்டங்களைப் பயன்படுத்தி எதையும் தீர்க்க மாட்டோம். அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம், ”என்று தளபதி வேக்கர் கூறினார்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வங்கதேசத்தில் நடந்த புதிய வன்முறையால் கடந்த இரண்டு நாட்களாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.