வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம் - திரும்புமா அமைதி?


டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, டாக்காவிலிருந்து தப்பியதை அடுத்து, அந்நாட்டு ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் நாட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்போம். நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது. என் பேச்சுக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். போராட்டங்களைப் பயன்படுத்தி எதையும் தீர்க்க மாட்டோம். அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம், ”என்று தளபதி வேக்கர் கூறினார்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார்.

கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உட்பட 88 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷேக் ஷசீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டதுடன் 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

x