பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்களிடையே மோதல்: 30 பேர் பலி, 145 பேர் படுகாயம்


பெஷாவர்: பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியினர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 145 பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் உள்ள போஷேரா கிராமத்தில் 5 நாட்களுக்கு முன்பு கடுமையான மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு நிலத்தகராறு காரணமாக பழங்குடியினர் மற்றும் மத குழுக்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்குவாவின் குர்ரம் மாவட்டத்தில் இந்த மோதல்களினால் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 145 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். போஷேரா, மாலிக்கல் மற்றும் தண்டார் பகுதிகளில் உள்ள ஷியா மற்றும் சன்னி பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை, பழங்குடியின முதியவர்கள், ராணுவத் தலைமை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உதவியுடன் இணைந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மாவட்டத்தின் சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மோதல்களை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாக்குதல்காரர்கள், மோட்டார் குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கனரக மற்றும் அதிநவீன ஆயுதங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்துவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பரசினார், சத்தா மீதும் மோட்டார் மற்றும் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மோதல்கள் காரணமாக அம்மாவட்டத்தில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

x