அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு


வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவும், வெற்றிப் பெறவும் தங்களது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்தார். இந்நிலையில் அவர் தனது வயோதிகம் காரணமாக பொதுக் கூட்டங்களில் பேசியபோது, நினைவு தடுமாறி உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அதிபர் தேர்தல் போட்டியில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என பேச்சுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து உள்கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், திடீரென கடந்த 21ம் தேதி அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் கமலா ஹாரிஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஆகியோர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். ஒபாமா, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கமலா ஹாரிஸுடன் பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “இந்த வார தொடக்கத்தில், மிட்செல்லும், நானும் எங்கள் நண்பர் கமலா ஹாரிஸை தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்தோம். நாட்டிற்கு இந்த முக்கியமான தருணத்தில், வரும் நவம்பரில் நடைபெறும் தேர்தலில் அவர் வெற்றிப் பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம். நீங்கள் (மக்கள்) எங்களுடன் இணைவீர்கள் என நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

x