கவோயுசிங்: சீனாவை நோக்கி வந்த சூறாவளியால் தைவான் சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது. எனவே அக்கப்பலில் பயணித்த 9 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
தைவானில் 2 பேர் உயிரிழந்த நிலையில், கெய்மி புயல் தெற்கு சீனாவை நோக்கி நேற்று வீசியது. எட்டு ஆண்டுகளில் தைவானைத் தாக்கும் வலிமையான சூறாவளி என்பதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தைவானின் தெற்கு கடற்கரையில் கெய்மி சூறாவளிக்கு மத்தியில், தான்சானியா கொடியுடன் ஒன்பது மியான்மர் நாட்டினைச் சேர்ந்த மாலுமிகளுடன் சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றால் தெற்கு துறைமுக நகரமான கவோயுசிங் கடற்கரையில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. இந்தக் கப்பல் மூழ்கியதால் அதன் ஒன்பது மாலுமிகளும் கப்பலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தைவானின் தேசிய தீயணைப்பு அமைப்பின் தலைவர் ஹ்சியாவோ ஹுவான்-சாங் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " மாலுமிகள் லைஃப் ஜாக்கெட்டுகளுடன் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவ மற்றொரு சரக்கு கப்பல் அந்தப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால். காற்று பலமாக இருந்ததால் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. வானிலை அனுமதிக்கும் போது, நாங்கள் உடனடியாக கப்பல்கள் அல்லது ஹெலிகாப்டர்களை அனுப்பி வைப்போம். ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. தைவானில் கெய்மி புயல் மணிக்கு 190 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடந்த பிறகு கப்பல் மூழ்கிய செய்தி வந்தது" என்றார்..