கிழிந்த ஆடைகளுடன் ஹோட்டலில் தஞ்சமடைந்த பெண்: ஆஸ்திரேலிய பெண்ணுக்கு பாரிஸில் நடந்த கொடூரம்


பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் 5 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜூலை 26ம் தேதி துவங்கி வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பாரீஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பாரிஸில் குவிந்துள்ளனர். இதேபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரும் பாரிஸ் நகர காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பாரிஸ் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போலீஸாரின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அந்த நகரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து 25 வயது இளம்பெண் ஒருவர் பாரிஸுக்கு வருகை தந்திருந்தார். பாரீஸ் நகரம் இரவு முழுவதும் விழித்திருக்கும் நகரம் என்பதால் அங்குள்ள கேளிக்கை விடுதிகளுக்கு சென்று அவர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 20ம் தேதி இரவு முழுவதும் அவர் மதுபான கூடங்களுக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காலை 5 மணிக்கு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமறித்த 5 நபர்கள் அவரை அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர்.

அந்த 5 பேரும் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின் அவர் கிழிந்த ஆடைகளுடன் அருகில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் புகுந்துள்ளார். அப்போது அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் ஒருவரும் அதே கடைக்கு வந்து உணவை ஆர்டர் செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கடையில் இருப்பவர்களிடம் உதவி கேட்டுள்ளார். கடையில் இருப்பவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உணவக பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து பாரிஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அனைவரும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் போல் இருந்ததாக அந்தப் பெண் கூறி இருப்பதை அடிப்படையாக வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதிஉயர் பாதுகாப்பு கொண்ட நகரிலேயே, வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்த கொடூரம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x