பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


புதுடெல்லி: 2024 ஹென்லி பாஸ்போர்ட் அட்டவணையில் முதலிடம் பிடித்துள்ள சிங்கப்பூர் பாஸ்போர்ட், உலகின் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

சிங்கப்பூரைத் தொடர்ந்து 2வது இடத்தில் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் 191 நாடுகளில் விசா இன்றி நுழைவதற்கு அனுமதிக்கிறது.

இந்தியாவின் பாஸ்போர்ட் இந்த தரவரிசையில் 82வது இடத்தில் உள்ளது. இது செனகல் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இணையாக 58 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது. இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை கடந்த ஆண்டு 84 ஆக இருந்தது. இது தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவுகளின்படி, இந்தியாவின் தரவரிசை 2006ம் ஆண்டு 71வது இடத்திலிருந்தது. 2015 முதல் பெரும்பாலும் 80-களின் நடுப்பகுதி வரை இருந்தது. கடந்த 2006ம் ஆண்டிலிருந்து மிக பின்தங்கிய தரவரிசையாக கடந்த 2021ல் 90வது இடத்தில் இருந்தது.

ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை வருமாறு (அடைப்புக்குறிக்குள் விசா இன்றி செல்லும் நாடுகளின் எண்ணிக்கை) :

1. சிங்கப்பூர் (195)

2. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் (192)

3. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் (191)

4. பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் (190)

5. ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் (189)

6. கிரீஸ், போலந்து (188)

7. கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா (187)

8.அமெரிக்கா (186)

9.எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185)

10.ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா (184)

x