நேபாள விமான விபத்தில் 18 பேர் பலி: காயங்களுடன் உயிர் தப்பிய விமானி


நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி தீப்பிடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு தனியார் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் இன்று சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடைபெற்றதை அடுத்து, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்து ஏற்பட்டவுடன் விமானத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புப் படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள போக்காரா விமான நிலையத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியதால் அந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

x