கம்போடியாவில் சைபர் மோசடி: 14 இந்தியர்கள் மீட்பு


புதுடெல்லி: மோசடியாக கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட 14 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்கள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சென்றதும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு இந்திய மக்களை குறிவைத்து இணையவழி மோசடியில் ஈடுபடுமாறு கிரிமினல்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசின் ஊழியர் ஒருவர் ரூ.67 லட்சத்தை இழந்ததை தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி தொடர்பாக கம்போடியா சென்ற இந்தியர்களுடன் தொடர்புடைய 8 பேரை ஒடிசாவின் ரூர்கேலா போலீஸார் கைது செய்தனர்.

250 இந்தியர்கள்: இதையடுத்து கம்போடியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவு அமைச்சகம் இறங்கியது. கடந்தஜனவரி முதல் கம்போடியாவில்இருந்து 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் இறுதியில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கம்போடியாவில் தற்போது 14 இந்தியர்களை உள்ளூர் போலீஸார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் உ.பி. மற்றும் பிஹாரை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்கியுள்ளனர். இவர்கள் தாங்கள் விரைவில் தாயகம் திரும்ப உதவிடுமாறு அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

x