சீனாவில் பலத்த மழை: பாலம் இடிந்து 11 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் மாயம்


பெய்ஜிங்: வடக்கு சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு ஆற்றுப்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

வடக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாங்சி மாகாண பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது ஷாங்லுவோவில் உள்ள ஓர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த ஆற்றின் பாலம் நேற்று இரவு 8.40 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுமார் 20 வாகனங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சீன ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஆற்றிலிருந்து 5 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களிலிருந்து 11 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சீன அரசு தொலைக்காட்சியில் வெளியான படங்கள், இடிந்து விழுந்த பாலத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டியது. ஷாங்சி மாகாணம், பாவோஜி நகரில் மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் மாயமாகி உள்ளதாகவும் அம்மாகாண ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேற்று நீரால் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிய சுற்றுப்புறங்களின் படங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்பகுதிகளில் நிவாரண, மீடபுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கில் கனமழை பெய்து வருகிறது. வடக்கில் பெரும்பகுதி தொடர்ச்சியான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளது.

x