டாக்கா: கடந்த 1971-ல் வங்கதேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 50%-க்கும் அதிகமான இட ஒதுக்கீடு 1972-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக பிற்காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டில் இந்த ஒதுக்கீட்டு முறையை பிரதமர் ஷேக் ஹசீனா அரசு ரத்து செய்தது.
ஆனால், மீண்டும் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் முடிவெடுத்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது.
இது குறித்த அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிநடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்தனர், 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இத்தகைய பதற்றமான சூழலில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை வழிமொழிந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவிட இந்திய தூதரகம் தயார் நிலையில் உள்ளது. உதவி எண்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.