மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு: உலகம் முழுவதும் விமான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிப்பு


நியூயார்க்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்தும் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் திடீரென செயலிழந்துள்ளதால் விமான சேவைகள் உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான கருவிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிள் மற்றும் லினக்ஸ் ஆகிய இயங்குதளங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பத்திரப்படுத்துவதற்காக க்ரவுட்ஸ்ட்ரைக் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் அப்டேட்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இன்று புதிய அப்டேட் ஒன்று க்ரவுட்ஸ்டிரைக் செயலிக்கு வழங்கப்பட்டிருந்தது. தன்னிச்சையாக இந்த அப்டேட் பதிவிறக்கமான நிலையில், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்தும் கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் திடீரென செயல் இழந்தன. நீல நிறத்தில் எரர் பேஜ் என்று அழைக்கப்படும் எச்சரிக்கை பக்கத்துடன் இந்த கணினிகள் செயல் இழந்துள்ளன. திரும்பத் திரும்ப அப்டேட் என்ற பெயரில் கணினிகள் ரீபூட் ஆகி வருவதால் பயனர்கள் தங்களது கணினியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான கணினி பயன்பாட்டாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அமெரிக்காவில் குறைந்த விலையில் விமான சேவை வழங்கும் பிராண்டியர் நிறுவனம், இந்த பிரச்சினை காரணமாக தனது விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பிரச்சினையை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

x