சீனாவில் 14 மாடி வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு


பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள 14 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் கடந்த 17ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மாடியில் இருந்து கரும்புகையுடன் தீ பரவியது. இது குறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். புதன் மாலை ஆரம்பமான மீட்புப் பணி நேற்று (வியாழன்) நிறைவடைந்தது. கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 75 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் 16 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறியச் செயற்குழு ஒன்றை நியமித்திருப்பதாக சீனாவின் அவசர மேலாண்மை மற்றும் தேசிய தீ மீட்பு நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதிலும் இருந்து தீயணைப்பு நிபுணர்கள் இந்த விபத்து சம்மந்தமான விசாரணையில் ஈடுபடவிருப்பதாகவும் அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றும்படி அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்திய பிறகும் சீனாவில் தீ விபத்துகள் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆங்காங்கே காணப்படும் பழுதடைந்த மின் கம்பிகள் மற்றும் வாயு குழாய்கள்தான் தீ விபத்துக்கான அடிப்படை காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

x