திடீர் தொழில்நுட்ப கோளாறு: ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்


ரஷ்யா: டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக ரஷ்யாவின் கிராஸ்நாயார்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ183 என்ற பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 விமான பணியாளர்கள் பயணித்தனர். ரஷ்யாவின் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவசரமாக அந்த விமானம் கிராஸ்நாயார்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து உரிய அனுமதி பெற்று அந்த விமானம் தற்போது கிராஸ்நாயார்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 225 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக ஏர் இந்தியா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. கார்கோ பகுதியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்கள் யாரும் இல்லாததால் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பிற விமான நிறுவன ஊழியர்களின் உதவியுடன் விமானத்தில் பயணித்த பயணிகளை சான்பிரான்சிஸ்கோ அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், கவலையுடன் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு எக்ஸ் தளம் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

x