பாரிஸ் ஒலிம்பிக் பாதுகாப்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள்: சிஆர்பிஎப் பெருமிதம்


பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, பாதுகாப்புப் பணிகளில் சிஆர்பிஎப் பிரிவினரின் 2 மோப்பநாய்கள் மற்றும் 3 பயிற்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வருகிற ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பாரிஸ் நகரில் குவிந்து வருகின்றனர். அவர்களுடன் பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

மேலும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடவும், தங்கள் நாட்டின் வீரர்களை உற்சாகப்படுத்தவும் பாரிஸ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் பாரிஸ் நகரமே குட்டி உலகமாக பல்வேறு தரப்பட்ட கலாச்சாரங்கள், மொழி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களின் சங்கமமாக மாறியுள்ளது. இதையொட்டி பாரிஸ் நகரம் முழுவதும் போலீஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதற்காக, இந்தியாவின் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையான சிஆர்பிஎப் சார்பில் 2 மோப்பநாய்கள் பாரிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாஸ்ட் மற்றும் டென்பி ஆகிய இரு மோப்பநாய்களுடன், 3 பயிற்சியாளர்களும் பாரிஸ் சென்றடைந்துள்ளனர். இந்த தகவலை சிஆர்பிஎப் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகள், போதைப்பொருட்களை கண்டறிவது, ஆபத்து நேரங்களில் குற்றவாளிகளை தடுத்து நிறுத்துவது ஆகிய பணிகளில் இந்த மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிவடையும் வரை இந்த பயிற்சியாளர்களும், மோப்பநாய்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x