எச்சரிக்கை: வயர்லெஸ் இயர்போன் செயலியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?


செல்போனில் வயர்லெஸ் இயர்போன் செயலிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தச் செயலிகள் மூலம் ஹேக்கிங் பிரச்சினையை எதிர்கொள்ள நேரும் என்பதை அறிந்திருக்கிறீர்களா? இதில் இருக்கும் விபரீதங்களைத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!

பொதுவாகவே பாடல்கள் கேட்க, செய்திகளைப் பார்க்க, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், வெப் தொடர்களைப் பார்க்க எனப் பல்வேறு பயன்பாடுகளுக்காக செல்போன் அல்லது மடிக்கணினியில் இயர் போன்களை நாம் பயன்படுத்துவது வழக்கம். தற்போது, செயலிகள் மூலம் இயங்கும் வயர்லெஸ் இயர் பிளக்குகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

இதுபோன்ற செயலிகள் மூலம், ப்ளூபக்கிங் (bluebugging) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரது செல்போன் உரையாடல்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் ஹேக் செய்ய முடியும் என்றும் எச்சரிக்கிறார் அப்ளைடு க்ளவு கம்ப்யூட்டிங் துறை நிபுணரான ஷுபோ பிரமாணிக்.

இதுதொடர்பாக, ’தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் பேசிய அவர், இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த வகை செயலிகளைப் பயன்படுத்துபவர்களின் அழைப்புகளை ஹேக்கர்களால் பதிவுசெய்ய முடியும் என்றும், குறுஞ்செய்திகளை வாசிக்கவும் அனுப்பவும் முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் செல்போனில் உள்ள தொடர்பு எண்களைத் திருடவும், மாற்றியமைக்கவும்கூட சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.

ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) எனும் தொழில்நுட்பத்தில் இயங்கும் இயர்பிளக்குகளுடன் இணைப்பில் இருக்கும் செயலிகளைப் பயன்படுத்தி ஒருவரின் அனுமதி பெறாமலேயே அவரது அழைப்புகளைக் கேட்க முடியும். பொது இடங்களில் ப்ளூடூத் வசதியைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கிறார் ஷுபோ பிரமாணிக்.

ப்ளூடூத்தை அணைத்து வைத்தல், பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் ப்ளூடூத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் இணைப்பைத் துண்டித்தல், செல்போன் அல்லது மடிக்கணினியின் சிஸ்டம் மென்பொருளை அப்டேட் செய்தல், பொது இடங்களில் வைஃபை வசதியைக் குறைவாகப் பயன்படுத்துதல், கூடுதல் பாதுகாப்புக்கு விபிஎன் சேவையைப் பயன்படுத்துதல் ஆகியவை இந்த அபாயத்திலிருந்து தப்பும் உபாயங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை ஆப்பிள் நிறுவனமே ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் (AirPods) இயர் பிளக்குகளுடன் இணைக்கப்படும் செயலி மூலம் இப்படியெல்லாம் வேவு பார்க்க முடியும் எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, இதற்குத் தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.

x