முக அடையாளத்தைக் கண்டறியும் முறைக்குத் தடை: இத்தாலி அரசின் முடிவுக்கு என்ன காரணம்?


பயோமெட்ரிக் முறையில் முக அடையாளத்தைக் கண்டறியும் முறைக்குத் தற்காலிகமாகத் தடை போட்டிருக்கிறது இத்தாலி. கூடவே, ‘ஸ்மார்ட் கிளாஸஸ்’ எனும் அதிநவீன கண்ணாடிக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முகத்தை வைத்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம், இன்றைக்குப் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. குற்றவாளிகளைக் கண்டறிய காவல் துறையினர் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், வணிக நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை ‘அடையாளம்’ காண இதைப் பயன்படுத்துவது உண்டு. கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் மனித உருவங்களின் முகங்களை, புகைப்படம் அடங்கிய அவர்களது சுயவிவரங்களின் அடிப்படையில், பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காண்பது இதன் அடிப்படை அம்சம்.

இந்நிலையில், இந்த முறைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது இத்தாலி. அந்நாட்டுஅரசின் தரவுப் பாதுகாப்பு முகமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதேசமயம், நீதி விசாரணை, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் தனிப்பட்ட தரவுகளை அரசு நிறுவனங்கள் பயன்படுத்துவதுகூட, பொதுநலனின் அடிப்படையில் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது என தரவுப் பாதுகாப்பு முகமை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமும் இத்தாலி நாட்டின் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகின்றன. எனினும் லெக்சே, ஆரெஸ்ஸோ ஆகிய இரு நகரங்களின் நகராட்சி நிர்வாகங்கள் இந்த நவீனத் தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் தரவுப் பாதுகாப்பு முகமை கூறியிருக்கிறது.

பயோமெட்ரிக் முறையில் முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை லெக்சே நகராட்சி சோதனை முறையில் அமல்படுத்தியிருந்தது. அதேபோல் ஆரெஸ்ஸோ நகர காவல் துறையினர், அகச்சிவப்புக் கதிர் தொழில்நுட்பம் கொண்ட மூக்குக் கண்ணாடிகளை (‘ஸ்மார்ட் கிளாஸஸ்’) அணிவதன் மூலம், காரின் நம்பர் ப்ளேட்டுகளைக் கண்டறிவதை சோதனை முறையில் மேற்கொண்டுவந்தனர்.

இந்தச் சூழலில், இதற்காகப் பிரத்யேகச் சட்டம் உருவாக்கப்படும் வரை, இந்தத் தொழில்நுட்பங்கள் இத்தாலியில் பயன்படுத்தப்படாது. அநேகமாக, இன்னும் ஓராண்டில் இதற்கான தனிச்சட்டம் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

x