‘இது மிக இழிவானது’ - தற்கொலைத் தாக்குதலைக் கண்டித்த துருக்கி அதிபர்


துருக்கியின் இஸ்தான்புல் நகர் அருகே நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இது மிக இழிவான தாக்குதல் என அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் கண்டித்திருக்கிறார்.

நேற்று (நவ. 13), இஸ்தான்புல் அருகே உள்ள இஸ்திக்லால் நகரில் சந்தைப் பகுதியில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், கரும்புகை சூழ்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்திக்லால் நகரில் இதற்கு முன்னர் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாதிகள், குர்து கிளர்ச்சியாளர்கள் இருந்ததால், அவர்கள் மீது துருக்கி அரசின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. இதற்கிடையே, இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது ஒரு பெண்ணாக இருக்கலாம் என துருக்கியின் துணை அதிபர் ஃபுவாட் ஓக்டே தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் எர்டோகன், “இது பயங்கரவாதத் தாக்குதல்தான் என உறுதியாகச் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், முதல் சமிக்ஞைகளைப் பார்க்கும்போது இதில் பயங்கரவாதச் செயல் இருப்பதை உணர முடிகிறது. இது ஒரு இழிவான தாக்குதல்” என்று கூறினார்.

x