சமீபத்தில் மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே, இரு நாடுகளின் அமைச்சர்களை இந்திய அமைச்சர் சந்தித்திருப்பது கூடுதல் கவனம் குவித்திருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துவரும் நிலையில், இரண்டு நாள் பயணமாக, நவம்பர் 7-ல் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார் ஜெய்சங்கர். அவருடன் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளும் சென்றனர். இந்தப் பயணத்தின்போது, மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவை அவர் சந்தித்துப் பேசினார். ரஷ்யத் துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவையும் சந்தித்தார்.
“கோவிட் பெருந்தொற்று, நிதி நெருக்கடிகள், வர்த்தக ரீதியான சிரமங்கள் போன்றவற்றை எதிர்கொண்டோம். அவை உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது இவற்றின் உச்சமாக உக்ரைன் விவகாரத்தின் விளைவுகளை நாம் பார்க்கிறோம்” என்று ரஷ்யத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா பரிந்துரைப்பதாகக் கூறினார். சர்வதேச சட்டத்துக்கு இந்தியா மதிப்பளிப்பதாகவும், ஐநா சாசனத்துக்குத் துணை நிற்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கம்போடியா தலைநகர் பினாம் பென்னில் நடந்துவரும் ஆசியான் - இந்தியா மாநாட்டில், இன்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மித்ரோ குலேபாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஜெய்சங்கர்.
அப்போது, உக்ரைன் போரின் சமீபத்திய நிலவரம், அணு ஆயுத அச்சுறுத்தல், போரை நிறுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. அதேசமயம், இரு நாட்டு அதிபர்களிடம் பல முறை பேசிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.