8 டாலர் ‘ப்ளூ டிக்’ கொடுத்த இன்னல்கள்: இறுதியாக எலான் மஸ்க் எடுத்த முடிவு!


8 டாலர் கட்டணம் கட்டினால், ட்விட்டர் கணக்கில் எந்த வித சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்படும் என அறிவித்து அதை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க், போலி கணக்குகள் அதிகரித்ததால் அந்த வசதியை நிறுத்திவைத்திருக்கிறார்.

44 பில்லியன் டாலருக்கு கடந்த மாதம் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதன் பின்னர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் நேர்ந்துவருகின்றன. மாதம் 7.99 டாலர் (இந்திய மதிப்பில் 645 ரூபாய்) கட்டணமாகச் செலுத்தினால், ப்ளூ டிக் எனும் சரிபார்ப்பு அம்சம் இல்லாமலேயே ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கலாம் என்று அவர் அறிவித்தார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தபோதும் அவற்றைப் புறக்கணித்துவிட்டு, இஷ்டம் இருந்தால் கட்டணம் கட்டி ப்ளூ டிக் பெறுங்கள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் மஸ்க்.

கடந்த புதன்கிழமை இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், டொனால்டு ட்ரம்ப் போன்ற ஆளுமைகள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பெயர்களில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டன. எலான் மஸ்க்குக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்துக்கும் போலி கணக்கு தொடங்கப்பட்டது. உடனடியாக போலி கணக்குகள் முடக்கப்பட்டன என்றாலும், இது ஒரு இம்சையாகத் தொடரும் என்பது உறுதியானது.

‘இப்படியான போலி கணக்கைத் தொடங்குபவர்கள், அது பகடியானது என்பதை வெறுமனே சுயவிவரப் பக்கத்தில் சொன்னால் மட்டும் போதாது. பெயரிலேயே பகடியானது எனச் சேர்க்க வேண்டும்’ என்று எலான் மஸ்க் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கட்டணம் கட்டினால் ப்ளூ டிக் கிடைக்கும் என வழங்கப்பட்டிருந்த வசதியை நிறுத்திவைக்க ட்விட்டர் நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

x