இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் நேபாளத்தில் இன்று (நவ.10)காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்க் மாவட்டத்தில் 5.7 ரிக்டரில் இந்த நில நடுக்கம் பதிவானது. தேசிய நிலநடுக்கவியல் மையம் இதனை உறுதி செய்துள்ளது. காலை 10.30 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், பூமியின் 10 கிமீ ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால் உடமை மற்றும் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சியாங் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அண்மை மாவட்டங்களும் உணர்ந்துள்ளன.
நேபாள தேசத்தின் மேற்கு பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் இன்றைய நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. நேபாளத்திலும் பெரியளவில் பாதிப்புகள் இல்லை.
அங்கு 6.6 ரிக்டரில் நேற்று பதிவான நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் படுகாயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. காணாமல் போன 3 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. மீட்பு பணியில் நேபாள போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்துள்ளனர்.