ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, 11 ஆயிரத்துக்கும் மேலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்திருக்கிறது. ஃபேஸ்புக் தொடங்கப்பட்ட 2004ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக பெரும் பணியிழப்பு நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார மந்தம் ஆகியவற்றை காரணமாக்கி பெரும் நிறுவனங்கள் அதிரடியாக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. ட்விட்டர், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் பெரும் அளவிலான பணியாளர் நீக்கத்தை அறிவித்துள்ளது. முன்னறிவிப்போடு நடைமுறைக்கு வரும் பணிநீக்கம் என்ற போதிலும் பணியிழந்தவர்கள், இதர நிறுவனங்களில் பணியாற்றுவோர், பணிக்கு தயாராவோர் என சகல தரப்பிலும் இவை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்கவும், செலவினங்களை குறைக்கவும் இந்த ஆட்குறைப்பு உதவும் என மெட்டா தெரிவித்துள்ளது. ஆனால் மறுபக்கத்தில் மெட்டாவெர்ஸ் தொடர்பான பெரும் முதலீடுகளை மெட்டா தொடர்ந்து வருகிறது. டெக் நிறுவனங்கள் மத்தியிலான ஆட்குறைப்பு தொடரும் என்று பரவும் தகவலால் பணியாளர்கள் மத்தியில் பதட்டமும் சூழ்ந்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு சலுகைகள் சிலவற்றையும் மெட்டா அறிவித்துள்ளது. அதன்படி அதன்படி அடுத்து வரும் 16 வாரங்களுக்கு அவர்கள் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் 6 மாதங்களுக்கான மருத்துவ செலவினம் ஆகியவற்றுக்கு மெட்டா பொறுப்பேற்கும்.